×

திருமண்டங்குடி திரு ஆரூரான் சக்கரை ஆலை நிர்வாகம் திவால் நோட்டீஸ் : விவசாயிகள் அதிர்ச்சி

தஞ்சை : தஞ்சை மாவட்டம் கும்பகோணம் அருகே திருமண்டங்குடி திரு ஆரூரான் சக்கரை ஆலை நிர்வாகம் திவால் நோட்டீஸ் கொடுத்துள்ளதால் விவசாயிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். கடந்த 2003ம் ஆண்டு  தொடங்கப்பட்ட திருஆரூரான்  சர்க்கரை ஆலை தனியார் சர்க்கரை ஆலையில் விருத்தாசலம், வேப்பூர், மங்கலம்பேட்டை, சிறுபாக்கம்,  எலவனாசூர்கோட்டை உள்ளிட்ட பல கோட்டங்களிலிருந்து  விவசாயிகள் கரும்புகளை கொண்டு வருகின்றனர்.

 இதன்மூலம் தினமும் 3 ஆயிரத்து 500 டன் கரும்பு  அரவை நடைபெற்று வருகிறது. ஆனால் பெற்ற கரும்புகளுக்கு விவசாயிகளுக்கு பணம் தராமல் பல கோடி ரூபாயை நிலுவையில் வைத்துள்ளதாக விவசாயிகள் புகார் தெரிவித்து பல்வேறு கட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் விவசாயிகளுக்கே தெரியாமல், அவர்கள் பெயரில் ஸ்டேட் வங்கி,. கார்ப்பரேஷன் வங்கி உள்ளிட்ட வங்கிகளில் பல விவசாயிகளின் பெயரில் சுமார் 350 கோடி ரூபாய் கடன் பெற்று சர்க்கரை ஆலை நிர்வாகம் மோசடி செய்துள்ள நிலையில் வீட்டிற்கு வங்கி நோட்டீஸ் வந்ததையடுத்து அதிர்ச்சியடைந்த விவசாயிகள் ஆலை முன் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ஆலை நிர்வாகம் ரூ.300 கோடிக்கும் மேல் விவசாயிகள் பேரில் கடன் வாங்கி உள்ள நிலையில், திடீரென நாளிதழ் மூலம் திவால் நோட்டீஸ் வெளியிட்டுள்ளது. இதனையடுத்து ஆலை நிர்வாகத்திற்கு கடன் கொடுத்தவர்கள், கடன் கொடுத்த வங்கிகள், ஒப்பந்த அடிப்படையில் கரும்பு கொடுத்து பல கோடி ரூபாய் நிலுவையாக பெற வேண்டிய விவசாயிகள் மற்றும் சர்க்கரை ஆலையில் பணிபுரியும் ஊழியர்கள் செய்வதறியாது தவித்து வருகின்றனர். ஆலை நிர்வாகத்தின் சொத்துகளை முடக்கி அதனை விற்று வங்கிகளுக்கு கடனை திரும்பச் செலுத்த வேண்டும் என்றும் கரும்பு நிலுவைத் தொகையை வழங்க வேண்டும் என்றும் விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர். 


Tags : Arooran Sugar , Kumbakonam, Sugar Mill, Bankruptcy, Notice
× RELATED சென்னையில் சர்வதேச தீவிரவாத அமைப்பின் ஆதரவாளர்கள் 3பேர் கைது..!!